

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் கரோனா விதிகளை பின்பற்றா மல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றதால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய்க்கிழமை நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். கடந்த சில மாதங்களாக கரோனா ஊரடங்கு காரணமாக சிறப்பு முகாம் நடைபெறாமல் இருந்தது. தற்போது கரோனா பரவல் குறைவாக இருப்பதால் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் நேற்று காலை சிறப்பு முகாம் தொடங்கியது. பல மாதங்களுக்குப் பிறகு முகாம் நடைபெறுவதால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டனர்.
கூட்டத்தில் இருந்தவர்கள் யாரும் கரோனா விதிகளை பின்பற்றாமல் நின்றிருந்தனர். ஆட்சியர் அலுவலக வளாகம் திருவிழா கூட்டம் போல் காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் இருந்ததால் வழக்கமான பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் செய்வதறியாமல் திணறினர். இதனால், மாற்றுத்திறனாளிகளுக்கும் காவல்துறையின ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முகாமில் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை உடனடியாக வழங்கப்பட்டது.
சிலருக்கு ஊனத்தின் தன்மை குறித்து கண்டறிவதில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.