

உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வளர்ச்சி திட்டங்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். சரக்கு ஏற்றுமதி, இறக்குமதிமென்மேலும் உயரக்கூடிய வகையில் தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்தையும் விரைவுபடுத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆங்காங்கே மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கரோனா தொற்று உறுதியாகி உள்ளதை தமிழக அரசு தகுந்த முன் ஜாக்கிரதையோடு கையாள வேண்டும்.
திமுக ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் மக்களின் ஒரேஎண்ணம். கொடுத்த வாக்குறுதிகளில் முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
குறிப்பாக இல்லத் தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய், நகை கடன் தள்ளுபடி, பயிர்க்கடன் தள்ளுபடி, மாதம் ஒருமுறை மின்சாரம் கணக்கீடு போன்ற அறிவிப்புகள் கிடப்பில் கிடக்கின்றன.
இவற்றை நிறைவேற்ற அரசு கவனம் செலுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது.
இவ்வாறு வாசன் தெரிவித்தார்.