

பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக தூத்துக்குடிக்கு மினி லாரியில் கடத்த முயன்ற ரூ.6.50 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்பராக் உள்ளிட்டவைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர்.
சேலம் ஓமலூர் அடுத்த ஆர்.சி.செட்டிப்பட்டிப் பகுதியில் ஓமலூர் போலீஸார் நேற்று அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவில் இருந்து தூத்துக்குடி நோக்கிச் சென்றமினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில், போர்வை லோடுக்கு இடையில் ரூ.6.50 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் பான்பராக்கைமறைத்து கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து, மினி லாரியுடன் புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் முகமது அப்துல் சலீம் மற்றும் அவருடன் இருந்தமத்திய பிரதேசத்தைச் சேர்ந்த திலீப் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.