

நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என ஏஐடியுசி ஓய்வூதியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தில் செயல்பட்டுவரும் ஏஐடியுசி ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் தஞ்சாவூரில் உள்ள மாவட்ட ஏஐடியுசி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்க துணைத் தலைவர் எம்.மாணிக்கம் தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர் பி.அப்பாத்துரை, ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், ஏஐடியுசி சம்மேளன துணைத் தலைவர் துரை.மதிவாணன் ஆகியோர் பேசினர். சங்க பொதுச் செயலாளர் டி.கஸ்தூரி, பொருளாளர் எஸ்.தாமரைச்செல்வன், கவுரவத் தலைவர் ஜெ.சந்திரமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓய்வுபெற்றுள்ள 75 ஆயிரம் தொழிலாளர்களுக்கு 69 மாத காலமாக வழங்கப்படாமல் உள்ள புதிய அகவிலைப்படியை ஓய்வூதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும். கடந்த 2020 மே முதல் ஓய்வுபெற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். அரசு ஓய்வூதியர்களுக்கு அமல்படுத்தப்படும் குடும்ப பாதுகாப்பு நல நிதி மற்றும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சார்பில் செப்.7-ம் தேதி(நாளை) கும்பகோணம் கோட்ட அலுவலகம் முன்பு நடைபெறும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது.