தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் - 31 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது :

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் -  31 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது :
Updated on
1 min read

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் சிறப்பாக பணியாற்றிய 31 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது(நல்லாசிரியர் விருது) நேற்று வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவுக்கு ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். இதில், 11 ஆசிரியர்களுக்கு தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கான சான்றிதழ்கள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ரூ.10,000 பரிசுத் தொகைக்கான காசோலைகளை அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன், தஞ்சாவூர் எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் ஆகியோர் வழங்கினர்.

விழாவில் கூடுதல் ஆட்சியர் (வருவாய்) என்.ஓ.சுகபுத்ரா, திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல, திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுக்கான சான்றிதழ்கள், வெள்ளிப் பதக்கங்கள், காசோலைகளை தமிழக அரஷசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் வழங்கினார். விழாவில், நாகை எம்.பி எம்.செல்வராஜ், திருவாரூர் எம்எல்ஏ பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆ.தியாகராஜன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் து.பார்த்தசாரதி, மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, நாகை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில், 6 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை ஏ.கே.எஸ்.விஜயன் வழங்கினார்.

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், 5 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது, சான்றிதழ், காசோலைகளை ஆட்சியர் ரா.லலிதா வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்டக் கல்வி அலுவலர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in