பெற்றோரை இழந்த மாணவருக்கு இலவச கல்வி : விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு

மாணவர் வெற்றிவேலுக்கு புத்தகங்கள் மற்றும் மொபைல் போனை பரிசளித்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.
மாணவர் வெற்றிவேலுக்கு புத்தகங்கள் மற்றும் மொபைல் போனை பரிசளித்த விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.
Updated on
1 min read

திருச்சுழி அருகே பெற்றோரை இழந்து தவித்த மாணவரை பள்ளியில் சேர்த்து இலவச கல்வி பயில விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஏற்பாடு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே குரவைகுளத்தைச் சேர்ந்த தாய், தந்தையை இழந்த மாணவர் வெற்றிவேல் (13) ஆட்சியரிடம் அளித்த மனுவில், எனது தந்தை 7.12.2019-ல் உயிரிழந்துவிட்டார். கடந்த ஜூன் 10-ம் தேதி தாயார் உயிரிழந்தார். தற்போது பாட்டி பூமியின் ஆதரவில் இருக்கிறேன். குடும்ப வருமானம் இல்லாததால் கல்வி பயில இயலாத சூழ்நிலை உள்ளது. பள்ளிப் படிப்பை தொடர உதவ வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

மாணவரின் நிலை குறித்து வருவாய்த் துறையினர் மூலம் ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி விசாரணை செய்தார். பின்னர், அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமின்றி வெற்றிவேல் கல்வி பயில நடவடிக்கை எடுத்தார்.

இதற்காக மாணவர் வெற்றிவேலும் அவரது பாட்டி பூமியும் நேற்று ஆட்சியரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். தற்போது 8-ம் வகுப்பு படித்து வரும் வெற்றிவேல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வசதியாக மொபைல் போனை ஆட்சியர் வழங்கினார். பொது அறிவு புக்கதங்களை பரிசளித்த ஆட்சியர், சிறப்பாக கல்வி பயின்று நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொண்டு, பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in