

ராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவரது மனைவி சத்யபிரேமா (25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 2018-ம் ஆண்டு வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற செந்தில்குமார், கடந்த ஆகஸ்ட்டில் சொந்த ஊர் திரும்பினார்.
சத்யபிரேமாவுடன் கன்னண்டை கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சரத்பாபு (27) நெருங்கிப் பழகி வந்ததாக செந்தில்குமாரிடம் உறவினர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் சக்கரக்கோட்டையில் உள்ள தாய் வீட்டுக்கு சத்யபிரேமா சென்றுவிட்டார்.
இந்நிலையில், செந்தில்குமார் தனது தந்தை முனியசாமி, தாயார் தெய்வானை, சகோதரர் ராஜ்குமார் ஆகியோருடன், சரத்பாபு ஆட்டோவை நிறுத்தியிருக்கும் ராமநாதபுரம் சாலைத் தெரு பகுதிக்கு நேற்று காலை வந்தார். அங்கிருந்த சரத்பாபுவை அரிவாளால் செந்தில்குமார் வெட்டினார். படுகாயமடைந்த சரத்பாபுவை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு பஜார் போலீஸார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக செந்தில்குமார், முனியசாமி, தெய்வானை ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான ராஜ்குமாரைத் தேடி வருகின்றனர்.