

காவிரி டெல்டா பகுதியில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்வதும், குறைவதுமாக இருப்பதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. கடந்தசில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தபடி உள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் (2-ம் தேதி ) விநாடிக்கு 12 ஆயிரத்து 871 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 13 ஆயிரத்து 670 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், மழை காரணமாக நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் முதல் டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 650 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் 68.67 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 68.55 அடியாக இருந்தது. அணையில் நீர் இருப்பு 31.47 டிஎம்சி-யாக உள்ளது.