

படித்த வேலைவாய்ப்பற்றோர் அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்தவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதற்கு 10-ம் வகுப்பு (தேர்ச்சி, தோல்வி) மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து, 5 ஆண்டுகள் நிறைவடைந்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும்வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதுக்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
வேலைவாய்ப்பு அடையாள அட்டையை காண்பித்து, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்அலுவலகத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது http://www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.