ஊராட்சி செயலாளர்களுக்கு 10 நாட்களுக்கான சம்பள தொகை பிடித்தம் : பதிவேடுகளை பராமரிக்காததால் ஆட்சியர் உத்தரவு
கிராம ஊராட்சிகளில் பதிவேடு களை முறையாக பராமரிக்காத 2 ஊராட்சி செயலாளர்களுக்கு 10 நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்ய மாதனூர் பிடிஓவுக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியத்துக்கு உட்பட்டமேல்குப்பம் மற்றும் வடச்சேரி ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று முன்தினம் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் எத்தனை நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது? கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் என்ன ? சொத்து பதிவேடு, இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் தொடர்பான பதிவேடுகளை ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு செய்தார்.
அப்போது, வடச்சேரி மற்றும்மேல்குப்பம் ஊராட்சிகளில் பல்வேறு பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதைகண்டு ஆவேசமடைந்த ஆட்சியர் அமர் குஷ்வாஹா வடச்சேரி ஊராட்சிச்செயலாளர் செல்வராணி, மேல்குப்பம் ஊராட்சிச் செயலாளர் குமார் ஆகியோரிடம் விளக்கம் கேட்டார்.
அதற்கு ஊராட்சி செயலாளர் கள் முறையான பதிலை அளிக்காததால், 2 ஊராட்சி செயலாளர் களுக்கும் 10 நாட்களுக்கான சம்பளப்பணத்தை பிடித்தம் செய்யவும், கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் இதர பணிகள் குறித்து பதிவேடுகளை 7 நாட்களுக்குள் சரி செய்து, அதற்கான விளக்கத்தை வழங்காவிட்டால் துறை ரீதியான நடவடிக்கையை அவர்கள் மீது எடுக்க வேண்டும் என மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளனுக்கு ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.
அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் மணவாளன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் கார்த்திகேயன், பணி மேற்பார்வை யாளர் ஆசைதம்பி உட்பட பலர் உடனிருந்தனர்.
