

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு நிறுத்தப்பட்ட சேலம் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டபோது, நாடு முழுவதும்பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், தொற்றுப் பரவல் குறையத் தொடங்கியதும், நிறுத்தப்பட்டிருந்த ரயில்களில் பெரும்பாலானவை முன்பதிவுடன் கூடிய சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது.
சேலம் ரயில்வே கோட்டத்தின் தலைமை இடமான சேலத்தில் இருந்து, இயக்கப்பட்டு வந்த சேலம்-சென்னை எழும்பூர் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பயணிகள் கூறியதாவது:
சேலம் ரயில்வே கோட்டத்தின் முக்கிய வழித்தடமான சேலம்-விருத்தாசலம் வழித்தடத்தில் சேலம்- சென்னை எழும்பூருக்கு இடையில் இயக்கப்பட்ட ரயில் மூலம் சேலம் மாநகர மக்களுக்கு மட்டுமல்லாது, மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்ட மக்கள் என அனைவருக்கும் முக்கிய ரயிலாக இருந்தது.
தற்போது, சேலம் கோட்டத்தில் இருந்து பல ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்ட நிலையில், சேலம்-எழும்பூர் விரைவு ரயில் இயக்கப்படாமல் உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தகவல் தொடர்பு நிறுவனங்கள் என அனைத்தும் மீண்டும் இயங்கத் தொடங்கிவிட்ட நிலையில் சேலம் மாவட்ட மக்கள் சென்னைக்கு செல்வது அதிகரித்துள்ளது.
ரயில் இயக்கம் இல்லாததால் பேருந்துகளில் பயணம் செய்வது பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பெரியவர்கள், குழந்தைகளுடன் செல்வோர், வேலைக்கு செல்வோர் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேலம்- சென்னை எழும்பூர் விரைவு ரயிலை மீண்டும் இயக்க சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.