கிருஷ்ணகிரியில் விடிய, விடிய பெய்த மழை :

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரில் அவதியுடன் நடந்து சென்ற மாணவர்கள்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரில் அவதியுடன் நடந்து சென்ற மாணவர்கள்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி நகரில் விடிய, விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே இரவு 10.30 மணிக்குப் பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து விடிய, விடிய கனமழையாக பெய்தது. கனமழையால் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சாக்கடை கால்வாய்களில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடியதால் துர்நாற்றம் வீசியதுடன், பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது.

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. மழையால் மைதானம் முழுவதும் சேறும், சகதியுமாக தண்ணீர் தேங்கி நின்றதால் வியாபாரிகள் சிரமம் அடைந்தனர்.

கனமழையால், கிருஷ்ண கிரியைச் சுற்றியுள்ள ஏரி, குளம் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று மதியம் 2 மணியளவில் ராயக்கோட்டை, ஆலப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் மித மானது முதல் கனமழை பெய்தது.

தருமபுரியிலும் மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 125.2 மி.மீ மழை பதிவானது. பாரூரில் 22.2, ஓசூர் 10.5, அஞ்செட்டி 3, ஊத்தங்கரை 42.4, தளி 10, பெனுகொண்டாபுரம் 10.2, சூளகிரி 5, நெடுங்கல் 13 மிமீ மழை பதிவாகி இருந்தது. இதேபோல், தருமபுரி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. பாலக்கோடு 9, தருமபுரி 3, மாரண்டஅள்ளி, பென்னாகரத்தில் 2, அரூரில் 14 மில்லமீட்டர் மழை பதிவாகி இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in