மணல் குவாரிகளை திறக்கக் கோரி - மாட்டுவண்டி தொழிலாளி தீக்குளிப்பு : உயிருக்கு போராடி வரும் நிலையில் உருக்கமான வீடியோ

மணல் குவாரிகளை திறக்கக் கோரி   -  மாட்டுவண்டி தொழிலாளி தீக்குளிப்பு  :  உயிருக்கு போராடி வரும் நிலையில் உருக்கமான வீடியோ
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே மாட்டுவண்டி மணல் குவாரி தொடங்க வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு தீக்குளித்த மாட்டுவண்டி தொழிலாளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிருக்கு போராடி வரும் நிலையில், அவர் மாட்டு வண்டி மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்கக் கோரி பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகேயுள்ள உதயநத்தம் காலனிதெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் (40). மாட்டுவண்டித் தொழிலாளியான இவர், மாட்டுவண்டி மணல் குவாரி திறக்கக்கோரி நேற்று முன்தினம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

தொடர்ந்து, இரவு 10 மணியளவில், மாட்டு வண்டி மணல் குவாரியை அரசு உடனடியாக தொடங்கி, மாட்டு வண்டி தொழிலாளர்களின் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் எனக்கூறிக்கொண்டே, தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், தஞ்சை மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு பாஸ்கர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தா.பழூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக மணல் எடுத்த வழக்கில் பாஸ்கரின் மாட்டுவண்டி தா.பழூர் போலீஸாரால் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் மனவேதனையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரலாகும் வீடியோ

இதையறிந்த சிஐடியு தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் தலைமையில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்று பாஸ்கருக்கு ஆறுதல் கூறியதுடன், உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தின் முன் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in