

சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
இன்று நடந்து கொண்டிருக்கும் மானிய கோரிக்கையில் (வீட்டுவசதி) குடிசை மாற்று வாரியமும் இணைந்துள்ள காரணத்தால், அது சம்பந்தமான அறிவிப்பை வெளியிடுகிறேன். கோட்டையில் இருந்தாலும் குடிசைவாழ் மக்களின் வாழ்க்கைக்காக, அவர்களின் முன்னேற்றத்துக்காக சிந்தித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. முதல்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, அந்தமக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக குடிசை மாற்று வாரியம்என்ற ஒரு திட்டத்தை தொடங்கினார். அதன்மூலம் பல்லாயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிக் கொடுத்தார்.
அன்று மத்திய அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன் ராம், இந்த திட்டத்தை பாராட்டி, புகழ்ந்து பேசியுள்ளார். இது தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற அவரது எண்ணத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். அந்த அளவுக்கு இந்த குடிசை மாற்று வாரியம் மிகச் சிறப்பாக தன் கடமையைச் செய்துள்ளது, செய்து கொண்டிருக்கிறது.
ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வாரியம், இனிமேல், ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ என்ற பெயரில் அழைக்கப்படும். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல; குடிசையில் வாழும் மக்கள் வாழ்வாதாரத்தையும் அவர்கள் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
இவ்வாறு முதல்வர் அறி வித்தார்.