சேலம் மாவட்டத்தில் இன்று 612 பள்ளிகள் திறப்பு : 95% ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்
சேலம் மாவட்டத்தில் இன்று (1-ம் தேதி) 612 பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 95 சதவீதம் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று (1-ம் தேதி) திறக்கப்பட்டு, 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் தொடங்குகின்றன.
சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 295 பள்ளிகள், தனியார் பள்ளிகள் 317 என மொத்தம் 612 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 95 சதவீதம் ஆசிரியர்கள் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போட்டுள்ள ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் பள்ளிகளில் வகுப்பறைகள் அனைத்தும் ஏற்கெனவே தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும்போது, அவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கவும், ஒரு வகுப்பறையில் 20 பேரும், ஒரு பெஞ்சுக்கு இருவர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அமரும் பெஞ்சுகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் வகுப்பறைக்குள் வருவதற்கு அவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வரும் வகையில் சமூக இடைவெளிக் கட்டங்கள் வரையப்பட்டுள்ளன. குடிநீர் அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவையும் தூய்மைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அரசு அறிவுறுத்தியுள்ள கரோனா தடுப்புக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை ஆசிரியர்களும், மாணவர்களும் பின்பற்றுவதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு பள்ளி அளவிலும் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
