கடன் நிலுவைத் தொகையை கேட்டு - நிதி நிறுவனம் நெருக்கடி:விவசாயி தற்கொலை :

கடன் நிலுவைத் தொகையை கேட்டு  -  நிதி நிறுவனம் நெருக்கடி:விவசாயி தற்கொலை :
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகேயுள்ள பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து (75). விவசாயியான இவர், கடந்த 2017-ம் ஆண்டு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 லட்சம் கடன் பெற்றார். அதற்கான தவணையை முறையாகச் செலுத்தியதால், அந்நிறுவனத்தினர் கடன் தொகையை ரூ.1.5 லட்சமாக அதிகரித்துக் கொடுத்தனர். அதன்பின் மாதம் ரூ. 6 ஆயிரம் தவணை செலுத்தி வந்தார்.

இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மருதமுத்துவால் குறிப்பிட்ட நாளில் தவணைத் தொகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு, 3 மாத தவணை நிலுவையில் இருந்தது.

இதை வசூலிப்பதற்காக அந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் 2 பேர் நேற்று பேரூரிலுள்ள மருதமுத்துவின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது மருதமுத்து, ஒரு வார காலம் அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால் , அதை ஏற்க மறுத்த அந்நிறுவன பிரதிநிதிகள், நிலுவைத் தொகையை வாங்காமல் வீட்டைவிட்டு போக மாட்டோம் எனக்கூறி வாசலிலேயே அமர்ந்து கொண்டதாக தெரிகிறது.

இதனால், மன உளைச்சலடைந்த மருதமுத்து, வீட்டுக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து, மனதளவில் நெருக்கடி கொடுத்து தனது தந்தையை தற்கொலைக்கு தூண்டிய தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருதமுத்துவின் மகன் வெங்கடேஷ் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in