

கரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நேற்று முதல் இயக்கப்பட்ட மதுரை-செங்கோட்டை ரயிலுக்கு விருதுநகர் மாவட்டத்தில் நேற்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இயக்கப்பட்ட பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன. தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
மதுரை-செங்கோட்டை இடையே இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று மதுரை-செங்கோட்டை மற்றும் செங்கோட்டை-மதுரை பயணிகள் ரயில் நேற்று முதல் விரைவு ரயிலாக இயக்கப்பட்டது.
மதுரையில் இருந்து நேற்று காலை செங்கோட்டை சென்ற இந்த விரைவு ரயிலுக்கு சிவகாசியில் அசோகன் எம்.எல்.ஏ. தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல் ராஜபாளையத்தில் ரயில் பயனாளர் அமைப்பு சார்பில் தனுஷ்குமார் எம்.பி. ரயில் ஓட்டுநர்கள் மற்றும் கார்டு, ரயில் நிலைய அலுவலர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.