

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 14,709 கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழை மற்றும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 13,296 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 14,709 கனஅடியாக அதிகரித்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 650 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனிடையே, நேற்று முன்தினம் 67.22 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 68.05 அடியானது. நீர்இருப்பு 31.04 டிஎம்சி-யாக உள்ளது.