

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன்(58) என்பவர் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். இந்தப் பயிரை அப்பகுதியில் மேயும் மயில்கள் சேதப்படுத்தியுள்ளன. இதையறிந்த சந்திரன், மக்காச்சோளப்பயிரை காப்பாற்றும் நோக்குடன் குருணை மருந்து தெளித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த மக்காச்சோளத்தை மயில்கள் சாப்பிட்டன. இந்நிலையில், சிறிதுநேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்துள்ளன. விளைநிலம் வழியாக சென்றவர்கள் ஆங்காங்கே மயில்கள் கிடந்ததுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் மயங்கிய நிலையில் கிடந்த மயில்களை பரிசோதித்தனர். அப்போது, அவைகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. பின்னர் விளைநிலத்தில் உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு, அவரை திட்டக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இறந்தமயில்களில் 4 ஆண் மயில்கள், ஒரு பெண் மயில் எனக் கண்டுபிடிக்கப்பட்டு, அவைகள் உடற்கூறு ஆய்வுக்காக உட்படுத்தப்பட்டு காப்புக் காட்டில் புதைக்கப்பட்டன.