

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சேலம் ஆட்சியரிடம் தமிழ்நாடு ஆஷா பணியாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காடு, அறுநூற்றுமலை, கருமந்துறை உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஆஷா பணியாளர்கள் நேற்று பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை தமிழ்நாடு ஆஷா பணியாளர் சங்கம் சார்பில் ஆட்சியர் கார்மேகத்திடம் வழங்கினர். அந்த மனு விவரம்:
தேசிய கிராமப்புற பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் (ஆஷா பணியாளர்கள்) பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு மாதம் தோறும் ரூ.3 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. கரோனா தொற்று காலத்தில் முன் களப்பணியாளராக பணிபுரிந்து கிராம மக்களிடையே பெருந்தொற்று தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்.
அதேபோல, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திலும் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். எங்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். மாதம் தோறும் தொகுப்பூதியமாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். கரோனா தொற்று கால நிவாரண தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.