

சேலம் மாவட்ட நூலகங்களுக்கு கடந்த ஆண்டு மற்றும் நடப்பாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான புதிய புத்தகங்கள் வந்துள்ளன. இவை சேலம் மாவட்ட மைய நூலகத்தில் இருந்து கிளை நூலகங்கள் மற்றும் ஊர்ப்புற நூலகங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
சேலம் மாவட்டத்தில் சேலம் மரவனேரியில் உள்ள மாவட்ட மைய நூலகம், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், நடமாடும் நூலகம் என மொத்தம் 141 நூலகங்கள் உள்ளன.
சேலம் மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு மற்றும் நடப்பு நிதியாண்டுக்கு சுமார் ரூ.2 கோடி மதிப்புள்ள புதிய புத்தகங்கள் வந்துள்ளன.
இந்த புத்தகங்கள் மாவட்ட மைய நூலகத்தில் இருந்து கிளை நூலகங்கள் மற்றும் ஊர்ப்புற நூலகங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக நூலகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்துக்கு புதிய புத்தகங்கள் வந்தன. கரோனா ஊரடங்கு காரணமாக நூலகங்கள் மூடப்பட்டிருந்ததால், புதிய புத்தகங்களை நூலகங்களுக்கு அனுப்ப முடியவில்லை.
தற்போது, நடப்பு நிதி ஆண்டுக்கு ரூ.80 லட்சம் மதிப்பிலான புதிய புத்தகம் வந்துள்ளன.
இவை வரலாறு, கட்டுரை, கவிதை, நாவல், பொது அறிவு, போட்டித் தேர்வுகளுக்கான நூல்கள், சிறுவர்களுக்கான நூல்கள் என பல்வேறு தலைப்புகளில் வந்துள்ளன.
தற்போது, நூலகங்கள் அனைத்தும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இதையடுத்து, கடந்த ஆண்டு மற்றும் நடப்பாண்டுக்கு சுமார் ரூ.2 கோடி மதிப்பில் வந்துள்ள புதிய புத்தகங்கள் அனைத்தையும் தலைப்பு வாரியாக பட்டியலிட்டு ஒவ்வொரு நூலகத்துக்கும் அனுப்பும் பணியை தொடங்கி இருக்கிறோம்.
கிளை நூலகங்களுக்கு சுமார் 5 ஆயிரமும், ஊர்ப்புற நூலகங்களுக்கு சுமார் 3 ஆயிரம் புத்தகங்களும் பிரித்து அனுப்பப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.