

முதியோர்களின் குறைகளை தீர்க்கவும், உதவிகள், ஆலோசனை வழங்கிட 14567 கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதியோர்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து உதவி எண்களை அறிவித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் செயல்படுத்தப்பட்டு அதற்கேற்ப விதிகளும் வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
முதியோர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு மத்திய சமூக நீதி அமைச்சகம் இந்தியாவின் பல மாநிலங்களில் கட்டணமில்லா உதவி மையங்களைத் தொடங்கியுள்ளது. முதியோர்களின் பிரச்சினைகளை தீர்க்க கட்டணமில்லா தொலைபேசி உதவி எண் 14567 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதியோர் இல்லங்கள், பராமரிப்பு மையம், பராமரிப்பாளர்கள், மருத்துவ ஆலோசனை வழங்கும் இடங்கள், வலி நிவாரண மையங்கள் குறித்து இந்த எண்ணில் தொடர்பு கொண்டு முதியோர்களுக்கு தேவைப்படும் தகவல்கள், அரசு திட்டங்களை பெற சட்ட வழிமுறைகள், பராமரிப்பு சட்டம் தொடர்பான வழிகாட்டுதல்கள். மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவு அளித்தல். ஆதரவற்ற, இடரில் உள்ள முதியோர் மீட்பு, குடும்ப உறுப்பினர்கள் அல்லது பிறரால் துன்புறுத்தப்படும் முதியோர்களுக்கு ஆதரவு அளித்து பிரச்சினைகளை தீர்க்க வழிகாட்டுதல் உள்ளிட்ட சேவைகளை பெறலாம்.
அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மூத்த குடிமக்கள் தங்களுக்கு நேரிடும் பிரச்சினைகள் மற்றும் குறைகளை 14567 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என்று தெரிவித்துள்ளார்.