

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி, சேலம் 3டி பெடரல் சைக்கிளிங் கிளப் சார்பில் இளைஞர்கள் தஞ்சாவூர் வரையில் விழிப்புணர்வு பயணத்தை நேற்று தொடங்கினர்.
பல்வேறு காரணங்களால் பூமி வெப்பமயமாதல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதனால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேட்டில் இருந்து பாதுகாக்கவும், இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சைக்கிள் பயன்பாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இப்பயணத்தை சேலம் இளைஞர்கள் தொடங்கியுள்ளனர்.
சேலத்தில் இருந்து தஞ்சாவூருக்கு சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ள இளைஞர்கள் மொத்தம் 400 கிமீ பயணம் செல்கின்றனர். தஞ்சாவூரில் பயணம் நிறைவடைகிறது.
இதுதொடர்பாக பயணம் மேற்கொண்ட இளைஞர்கள் கூறும்போது, “இப்பயணத்தின் போது சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்தும், சைக்கிள் பயணத்தின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வுள்ளோம்” என்றனர்.