

ஏற்காட்டுக்குச் செல்ல பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள பூங்காக்கள் திறக்காததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதேநேரம் படகு சவாரிக்கு அனுமதிக்கப்படுவதால், மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில், சுற்றுலா தலங்களில் பூங்காக்கள், படகுத்துறைகள், உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்டவை திறக்க அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து, ஏற்காட்டில் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த சுற்றுலாத் துறையின் படகுத்துறை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதனால், ஏற்காடு வந்திருந்த பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
படகுத் துறையில் மிதி படகுகள், துடுப்புப் படகுகள், மோட்டார் படகு உள்ளிட்டவை இயக்கப்பட்டன. குறிப்பாக, புதிதாக வந்துள்ள மேற்கூரையுடன் கூடிய நவீன படகும் இயக்கப்பட்டன.
வழக்கமாக விடுமுறை அல்லாத நாட்களில் 700 பேர் வரை படகு சவாரி செல்லும் நிலையில், கடந்த இரு தினங்களாக சராசரியாக 400 பயணிகள் படகு சவாரியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, ஏற்காட்டில் பயணிகளை அதிகம் கவரும் தோட்டக்கலைத்துறையின் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரிப் பூங்கா, தாவரவியல் பூங்கா, வனத்துறையின் மான் பூங்கா உள்ளிட்டவை திறக்கப்படாமல் இருந்தது. இதனால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதேபோல, சேலம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடமான சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, சேலம் அண்ணா பூங்கா, ஆத்தூர் அடுத்த ஆனைவாரி முட்டல் அருவி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களும் திறக்கப்படவில்லை. இதனால், இவை திறக்கப்படும் என எதிர்பார்த்திருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.