

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் பயிற்சி பெற்று காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்ச்சிபெற்ற 24 பேருக்கு மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு பாராட்டு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வில் பயிற்சி பெற்ற 24 மாணவ, மாணவியர் தேர்ச்சிபெற்றனர். இவர்கள் 24 பேரும், மாவட்ட ஆட்சியரை சந்தித்தனர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார். அவர்களுக்கு காவல்துறையின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து, மக்களுக்கு சிறந்த சேவை செய்ய வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஜோதிமணி, வேலைவாய்ப்புத்துறை உதவி இயக்குநர்கள் கா.ஹரிபாஸ்கர், ம.மரிய சகாய ஆண்டனி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சை.சையது முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.