

சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்தர கடை அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகர சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் துரை. நாராயணன், செயலாளர் பி. மணிகண்டன் உள்ளிட்டோர் அளித்த மனு:
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சாலையோரமாக வியாபாரம் செய்து வருகிறோம். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக டவுன் வடக்கு ரதவீதி, கீழ ரதவீதிகளில் பழங்கள், பனியன், பேன்ஸி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சில்லறையாக வியாபாரம் செய்துவருகிறோம். இதிலிருந்து கிடைக்கும் வருவாயில் குடும்ப ஜீவனாம்சம் நடைபெறுகிறது. கரோனா பேரிடரால் தொழில் முடங்கி துயரத்தில் உள்ளோம். தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரதவீதிகளில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதனால், எங்களது வியாபாரம் பாதிக்கப்படும். இத்திட்டப்பணிகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். எங்களது வாழ்வாதாரத்தை காக்க நயினார்குளம் கரைப்பகுதியில் நிரந்தர கடைகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆட்சியர் அலுவலகமுன் தாங்கள் விற்பனை செய்யும் பொம்மைகள், துணிமணிகளுடன் கோரிக்கையை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜாதி சான்றிதழ் கேட்டு மனு
திருநெல்வேலி மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் ஜாதியை சேர்ந்த குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசிக்கிறார்கள். இச்சமுதாயத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளின் பள்ளிச் சான்றிதழ்களில் காட்டு நாயக்கர் என்று ஜாதி பெயர் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. இவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது.
ஜாதி சான்றிதழ் கிடைக்காததால் பலர் நன்றாக படித்திருந்தும் உரிய பணிகளுக்கு செல்ல இயலவில்லை. இதர சட்ட சலுகைகளையும் பெறமுடியவில்லை. எனவே, காட்டு நாயக்கர் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.