முதியவரை ஏமாற்றி - 30 பவுன் தங்க நகைகள் திருட்டு :

முதியவரை ஏமாற்றி -  30 பவுன் தங்க நகைகள் திருட்டு :
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலநாயனகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் தேவன் (74). இவரது மனைவி லட்சுமியம்மாள் (66). இந்நிலையில், நேற்று காலை லட்சுமியம்மாள் அருகேயுள்ள நிலத்துக்கு மாடுகளை மேய்ச் சலுக்கு ஓட்டிச்சென்றார்.

தேவன் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பிற்பகல் 12 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் இருவர் லட்சுமியம்மாள் வீட்டுக்கு வந்தனர். வீட்டில் இருந்த தேவனிடம் சென்று லட்சுமியம்மாளிடம் நாங்கள் ரூ.3 ஆயிரம் கடன் வாங்கினோாம். அந்த தொகையை திருப்பிக் கொடுக்க வந்துள்ளோம். அவர் எங்கே எனக் கேட்டுள்ளனர்.

லட்சுமியம்மாள் மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றுள்ளார் என தேவன் கூறியுள்ளார். உடனே, அந்த நபர்கள் செல்போனில் லட்சுமியம்மாளுடன் பேசுவது போல் நடித்து, தேவனிடம் பணத்தை பீரோவில் வைக்க லட்சுமியம்மாள் கூறியதாக தெரிவித்துள்ளனர். ஆனால், தேவன் பணத்தை என்னிடம் கொடுங்கள். லட்சுமியம்மாள் வந்தவுடன் அந்த பணத்தை நானே அவரிடம் கொடுக்கிறேன் எனக்கூறி யுள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்த அந்த மர்ம நபர்கள் பீரோவில் தான் அவர் பணத்தை வைக்கச்சொன்னார் எனக்கூறி, அவர்களே வீட்டின் உள்ளே சென்று பீரோவில் பணத்தை வைத்து விட்டதாக தேவனிடம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச்சென்றனர். பிற்பகல் 2 மணியளவில் லட்சுமியம்மாள் வீட்டுக்கு வந்தவுடன் நடந்த சம்பவத்தை தேவன் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த லட்சுமியம்மாள் நான் யாருக்கும் கடன் கொடுக்கவில்லையே எனக்கூறியபடி பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் தங்க நகைகள் மாயமாகியிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கந்திலி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in