திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் - 16 பேர் தீக்குளிக்க முயற்சி :

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  -  16 பேர் தீக்குளிக்க முயற்சி :
Updated on
1 min read

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் வீட்டுமனை இடத்தை மீட்டுத் தரக்கோரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டது மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்க இழுத்தடிப்பதாக கூறி பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றது என அடுத்தடுத்து நடந்தன.

திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து பகுதியைச் சேர்ந் தவர் மருதமுத்து. இவரது மனைவி வெள்ளையம்மாள். இவருக்கு 1998-ம் ஆண்டு தோட்டனூத்து ஊராட்சி மேட்டூர் பகுதியில் அரசு சார்பில் 3 சென்ட் நிலத்துக்கான தூசி பட்டா வழங்கப்பட்டது. இந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதனை மீட்டுத் தரக்கோரி மருதமுத்து, அவரது மனைவி வெள்ளையம்மாள் மற்றும் மகன், மகள், பேரன், பேத்தி உள்ளிட்ட 15 பேர் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றினர். பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் இவர்களை தடுத்து கேனை பறித்தனர்.

இவர்கள் கோரிக்கையை உரிய அலுவலர்களிடம் எடுத்துக் கூறி நிறைவேற்றி தருவதாக டி.எஸ்.பி. சுகுமார் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் சென்றனர்.

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த சகாயமேரி என்பவர் தனது கணவர் ஜேம்ஸின் இறப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் வழங்கவில்லை. இதைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன் அவர் தீக்குளிக்க முயன்றார். போலீஸார் அவரைத் தடுத்து காப்பாற்றி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in