கன்னியாகுமரியில் 4 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் உற்சாகம் - விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு படகுகள் இயக்கம் :

அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து திருச்செந்தூர் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள்.
அரசு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து திருச்செந்தூர் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள்.
Updated on
2 min read

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு 4 மாதத்துக்கு பின்னர் படகுபோக்குவரத்து நேற்று தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.

கரோனா 2-வது அலை தீவிரமடைந்ததால் கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் படகு இல்லத்தில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் படகு சேவை ரத்து செய்யப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் படகு இல்லம் வெறிச்சோடி காணப்பட்டது. இதுகுறித்து தகவல் தெரியாமல் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

படகு சேவை தொடக்கம்

சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று 500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்தை உற்சாகத்துடன் பார்வையிட்டனர். கூட்டம் அதிகமில்லாததால் சிறப்புவரிசையின்றி ரூ.50 கட்டணத்தில் சாதாரண வரிசையில் அனைவருக்கும் டிக்கெட் கிடைத்தது.

இதுகுறித்து கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக மேலாளர் முத்துராமன் கூறும்போது, ‘‘கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி படகு போக்குவரத்து தொடங்கியுள்ளது. குறைந்தளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்ததால் இரு படகுகளிலும் முகக்கவசம் அணிந்த தலா 75 பேர் மட்டுமே சவாரிக்கு ஏற்றப்பட்டனர். படகு இல்ல நுழை வாயிலிலும், படகிலும் கைகழுவும் திரவம் வைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. பயணிகள் அதிகம் வரும்போது பிற படகுகளும் இயக்கப்படும். அதிநவீன படகுகளான திருவள்ளுவர், தாமிரபரணி ஆகியவை தயார் நிலையில் உள்ளன’’ என்றார்.

பூங்காக்கள் திறப்பு

நேற்று மாலை சூரிய அஸ்தமனத்தை காணவும் குமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கேரளாவில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் குமரியில் இருந்து அம்மாநிலத்துக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. புதிய திரைப்படங்கள் வெளியாகாததால் நாகர்கோவிலில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

திருச்செந்தூர் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள்

திருச்செந்தூரில் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கரோனா காரணமாக கடற்கரை மற்றும் நாழிக்கிணற்றில் பக்தர்கள் புனித நீராட கடந்த 4 மாதங்களாக அனுமதி அளிக்கப்படவில்லை. தொற்றின் தாக்கம் குறைந்ததால் தமிழக அரசு படிப்படியாக பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராட 4 மாதங்களுக்கு பின் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் நேற்று ஏராளமான பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணற்றிலும் புனித நீராடிய பின்னர் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபடவும், சுவாமிக்கு அபிஷேக பொருட்கள் கொடுப்பதற்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. இதேபோல தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை, ரோச் பூங்கா, மணப்பாடு, குலசேகரன்பட்டினம், காயல்பட்டினம் கடற்கரை பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் நேற்று அனுமதிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in