தேவர்குளம் - ஆலங்குளம் பேருந்து ரத்து :

தேவர்குளம் - ஆலங்குளம் பேருந்து ரத்து :
Updated on
1 min read

தேவர்குளத்தில் இருந்து ஆலங்குளத்துக்கு இயக்கப்பட்ட பேருந்து நிறுத்தப்பட்டதால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சங்கரன்கோவில் வட்டம்,தேவர்குளத்தில் இருந்து ஆலங்குளம் இடையே முத்தம்மாள்புரம், கண்ணாடிகுளம், தட்டப்பாறை, கம்மாவூர், ரெட்டியார்பட்டி, நெட்டூர், மருதப்பபுரம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் வழியாக ஆலங்குளத்துக்கு நகரப் பேருந்து சேவை கடந்த 2016-ம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் அந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதிப்படுகினற்னர்.

இதுதொடர்பாக, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

ஆலங்குளம் ஒன்றியம் மருக்காலன்குளம் பகுதியைச் சேர்ந்தபள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுரண்டை அல்லது குற்றாலத்துக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதேபோல், விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை சுரண்டைக்கு கொண்டு செல்ல வேண்டும். பேருந்து வசதி இல்லாததால் இந்த பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இதுபோல், மருக்காலன்குளத்தில் இருந்து பலபத்திரராமபுரம், குறிஞ்சாகுளம், கீழகலங்கல், மேலகலங்கல், குறிச்சான்பட்டி, வாடியூர், சுரண்டை, சாம்பவர்வடகரை, தென்காசி வழியாக குற்றாலத்துக்கு நகர பேருந்துவசதி செய்து தர வேண்டும்.

சீவலப்பேரியில் உள்ள பிரசித்தி பெற்ற பூலுடையார் சாஸ்தா கோயிலுக்கும், புளியம்பட்டியில் உள்ள அந்தோணியார் ஆலயத்துக்கும் சுரண்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் சென்று வருகின்றனர்.

பொதுமக்கள் வசதிக்கேற்பசுரண்டையில் இருந்து வீரகேரளம்புதூர், வீராணம், ரெட்டியார்பட்டி, அழகிய பாண்டியபுரம், மானூர், திரு நெல்வேலி, சீவலப்பேரி வழியாக புளியம்பட்டிக்கு பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in