

பாரூர் அருகே செவிலியரின் கணவரை போனில் மிரட்டிய அரசு மருத்துவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
போச்சம்பள்ளி வட்டம் பாரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணிபுரிபவர் மருத்துவர் முருகன் (41). இவருக்கும் இதே சுகாதார நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பணிபுரிந்த செவிலியர் ஜானகி என்பவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து முருகன் பண்ணந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், ஜானகி சூளகிரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டனர்.
சில ஆண்டுகளுக்கு பின்னர் முருகன் மீண்டும் பாரூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கே மாறுதலாகி வந்தார்.
இந்நிலையில், அண்மையில் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பாரூர் பொதுமக்கள் மனு அளித்தனர்.
மனுவில், மருத்துவர் முருகன் முறையாக பணிக்கு வருவதில்லை என்றும், போதையுடன் பணிபுரிவதாக குற்றம்சாட்டினர்.இத்தகவலை அறிந்த முருகன் தனக்கு எதிராக கிராம மக்கள் மனு அளிக்க செவிலியர் ஜானகி மற்றும் அவரது கணவர் பன்னீர்செல்வம் ஆகியோர் காரணம் என கருதியுள்ளார்.
இதுதொடர்பாக பன்னீர்செல்வத்தை போனில் தொடர்பு கொண்ட முருகன் ஆபாச வார்த்தைகளில் திட்டி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பாரூர் காவல் நிலையத்தில் பன்னீர்செல்வம் புகார் அளித்தார். புகாரின்பேரில், முருகன் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.