பள்ளிகளில் கரோனா தடுப்புப் பணியை - கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் : ஆலோசனைக் கூட்டத்தில் சேலம் ஆட்சியர் அறிவுரை

பள்ளிகள் திறப்பு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், ஆட்சியர் கார்மேகம் பேசினார்.
பள்ளிகள் திறப்பு தொடர்பான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது குறித்து சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், ஆட்சியர் கார்மேகம் பேசினார்.
Updated on
1 min read

செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் தினசரி ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என சேலம் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிகளில் கரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் (வளர்ச்சி) ஷேக் அப்துல் ரஹமான், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகள், குடிநீர் தொட்டிகள், கழிவறைகள், பள்ளி வளாகம் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்க வேண்டும். தினசரி பள்ளிகள் தொடங்கும் முன்னரும், பள்ளிகள் நிறைவடையும்போதும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

அனைத்துப் பள்ளிகளிலும் மருத்துவக் குழுக்கள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளவும், கரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய விளம்பரங்களை அனைத்து பள்ளிகளிலும் வைக்கவேண்டும்.

ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாமுக்கு சுகாதாரத் துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வர ஏதுவாக,தேவையான அனைத்து வழித்தடங்களிலும் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும்.

பள்ளியைச் சுற்றியுள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவப் பணியாளர்கள், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளின் விவரங்களை உடனுக்குடன் பள்ளிகளுக்கு வழங்கி, அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்து மாணவர்களுக்குத் தேவையான வைட்டமின், ஜிங்க் மாத்திரைகளை வழங்க வேண்டும்.

பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள், விடுதிகளிலுள்ள மாணவர்கள் தங்கும் அறை, சமையலறை, குடிநீர் தொட்டிகள், கழிப்பறைகள் மற்றும் விடுதி வளாகம் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்படுவதையும் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து தனியார் பள்ளிகளின் வாகனங்களை தணிக்கை செய்து நல்ல முறையில் உள்ளதை உறுதிபடுத்த வேண்டும்.

தனியார் பள்ளிகளின் போக்குவரத்து வாகனங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவதை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பள்ளிகளை தினமும் ஆய்வு செய்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in