

ஏற்காட்டில் வேன் கவிழ்ந்ததில் இளைஞர் உயிரிழந்தார். மேலும், 15 பேர் காயம் அடைந்தனர்.
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த சன்னியாசிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் குறள்தாசன் (23), தினேஷ் (18), குமரகுரு (19), கொத்தபிரிநத்தம் வடிவேல் (22), விழுப்புரம் மாவட்டம் சடையாண்டி குப்பம் உதயகுமார் (19), கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த கரம்பூரைச் சேர்ந்த ரமேஷ் (25) உள்ளிட்ட 15 பேர் வேன் மூலம் நேற்று காலை ஏற்காடு வந்தனர். வில்லியனூர் மங்கலத்தைச் சேர்ந்த முத்துகுமார் (23) வேனை ஓட்டி வந்தார். ஏற்காடு முழுவதையும் சுற்றிப் பார்த்த பின்னர் அவர்கள் வேனில் குப்பனூர் வழியாக ஊருக்கு புறப்பட்டனர். வாழவந்தி அருகே சரிவான குறுகிய வளைவில் வேன் திரும்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் சாலையில் கவிழ்ந்தது.
இதில், வேனின் படிக்கட்டில் அமர்ந்திருந்த ரமேஷ் வேனின் அடியில் சிக்கி உயிரிழந்தார். மேலும், ஓட்டுநர் உள்ளிட்ட 15 பேர் காயம் அடைந்தனர்.காயம்அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு வாழவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக ஏற்காடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.