போலி நிறுவனங்களிடம் ஏமாறுவதை தடுக்க - இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்துங்கள் : மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

போலி நிறுவனங்களிடம் ஏமாறுவதை தடுக்க -  இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்துங்கள் :  மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் பணிக்கான நேர்காணலில் பங்கேற்குமாறு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதனுக்கு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று 2017-ல் அழைப்புக் கடிதம் அனுப்பியது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டது.

நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.வைத்தியநாதன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது:

திருநெல்வேலியை சேர்ந்த வேலைவாய்ப்பு நிறுவனம் பாரதிராஜா என்ற பொறியியல் பட்டதாரியிடம் பணம் பறிக்க முயற்சித்துள்ளது. இதனால், அவர் தனது பெயருக்கு பதிலாக நீதிபதி எஸ்.வைத்தியநாதனின் பெயர், முகவரியை அளித்தது சிபிசிஐடி சைபர்கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அந்த நிறுவனம் வேலை வாங்கித் தருவதாக கூறி 80 பேரிடம் ரூ.9.28 லட்சம் மோசடி செய்துள்ளது. இதுதொடர்பாக சித்ரா என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதாப், ராஜ் ஆகியோர் தலைமறைவாக உள்ளதால் இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இவ்வாறுபோலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சித்ரா மீதான வழக்கைதனியாக பிரித்து, விசாரணையை 6 மாதத்தில் முடிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர், நீதிபதிகள் கூறியதாவது:

போலியான வேலைவாய்ப்பு நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி அவர்களிடம் பணம் பறிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளன. இதனால் பலஇளைஞர்கள் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது வேதனைக்குரியது.

இதை தடுக்கவும், வேலைவாய்ப்பின்மையை சமாளிக்கவும் இளைஞர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சுயவேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும். இந்த வழக்கில் சிபிசிஐடி சுணக்கம் காட்டினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 2022 பிப்ரவரிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in