திமுக ஆட்சி - கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்

திமுக ஆட்சி - கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு  :  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்
Updated on
2 min read

திமுக ஆட்சி கொஞ்சம் இனிப்பு, நிறைய கசப்பு என்பதாக இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது:

புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு 6 மாத காலம் அவகாசம்தரவேண்டும் என்பது மரபு. இருப்பினும், திமுகவின் இந்த 100 நாள்ஆட்சி என்பது கொஞ்சம் இனிப்பு,நிறைய கசப்பு, பெருவாரியான காரம் என்பதாக இருக்கிறது.மத்திய அரசுடன் இணைந்து 2-ம் அலை கரோனா பரவலை கட்டுப்படுத்தியது இனிப்பு. ஒன்றிய அரசு என்பதில் தொடங்கி பல்வேறு விஷயங்களை தேவையில்லாமல் பேசி வருவதுதான் கசப்பு. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாஜகதொண்டர்களை கைது செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்ட ஒன்று. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக அதை மீண்டும் கையில் எடுப்பதுபோல தோன்றுகிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு, கரோனா3-ம் அலைக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து, அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 54 கோடியைகடந்துள்ளது. தமிழகத்தில் 2.5 கோடியை கடந்துவிட்டது. அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

100 நாளில் மக்கள் ஏமாற்றம்

கரோனா பரவல் காரணமாக பொருளாதாரம் மிக மோசமான சரிவை கண்டுள்ள நிலையில், அரசு நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அதேநேரம், கடன் அளவும் தொடர்ந்து உயர்ந்துவருகிறது. நாட்டின் பிற மாநிலங்களிலும் கடன் வாங்குவார்கள். அவை எல்லாம் முதலீடு செய்யவாங்கப்படும் கடனாகும். தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறையை சரிசெய்வதற்காக அதிக வட்டிக்கு கடன் வாங்கி உள்ளனர்.

தமிழக அரசின் நிதி நிலவரம், பெருகிவரும் கடன் சுமை, தொடர்ந்து ஏற்படும் வருவாய் இழப்பு ஆகியவை குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டும், பட்ஜெட் உரையிலும் புள்ளிவிவரங்களுடன் விளக்கி இருந்தார்.

2011-12 ஆண்டில் ரூ.1.04 லட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன் 10 ஆண்டுகளில், அதாவது 2021-ல் ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனால், தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.64 லட்சம் கடன் உள்ளது. இதற்கு முன்பு தமிழகம் இவ்வளவு பெரிய பற்றாக்குறையை சந்தித்தது இல்லை.

இந்த பட்ஜெட்டின் கவலைக்குரிய அம்சம் என்றால், அது தமிழக அரசின் பெருகிவரும் கடன்தான். இனி என்ன செய்து தமிழக அரசு இந்த கடனை திரும்பக் கட்டி முடிக்கப்போகிறது என்ற கேள்விக்கு திமுக அரசின் பட்ஜெட்டில் பதில் இல்லை.

நீட் தேர்வு ரத்து, நகைக் கடன், கல்விக் கடன், விவசாயக் கடன் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000, டீசல் விலை குறைப்பு என்ற வாக்குறுதிகளை எல்லாம் நம்பிய மக்கள்‌ இந்தஆட்சியின்‌ 100 நாள்‌ செயல்பாடுகளில் ஏமாற்றம்‌ அடைந்து நிற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in