

ஈரோடு விசைத்தறிக் கூடங்களில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு இலவச வேட்டி, சேலை விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கென, 209 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கம் மூலம் 1.80 கோடி பேருக்கு வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்படுகிறது.
இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யும் பணியில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட விசைத்தறியாளர்களே பெரும் பங்கு வகித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்துக்கு 1.32 கோடி பேருக்கான இலவச வேட்டி, சேலை ஆர்டர் வழங்கப்பட்டுள்ள நிலையில், உற்பத்தி செய்யும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட விசைத்தறியாளர்கள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 48 விசைத்தறி தொடக்க கூட்டுறவு நெசவாளர் சங்கத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கு ஆர்டர் வழங்கப்பட்டது. இதில், 10 சதவீதம் பாவு வழங்கப்பட்டு, ஆயிரம் தறிகளில் உற்பத்தி பணி தொடங்கி உள்ளது. இலவச வேட்டி, சேலை உற்பத்திப் பணிகள் டிசம்பர் 31-க்குள் நிறைவு செய்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்றனர்.
கரோனா ஊரடங்கால், உற்பத்தி பாதித்த விசைத்தறிகள், தற்போதைய தளர்வால் முழு வீச்சில் இயங்கத் தொடங்கியுள்ளன. இச்சூழலில் இலசவ வேட்டி, சேலை உற்பத்திக்கான பாவு வழங்கியதால், விசைத்தறிகள் முழு அளவில் இயங்கத் தொடங்கியுள்ளன.