‘தரமற்ற முறையில் கட்டுமான பணிகள்’ புகார் எதிரொலி - திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் :

‘தரமற்ற முறையில் கட்டுமான பணிகள்’  புகார் எதிரொலி -  திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் :
Updated on
1 min read

திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை அமைக்க கடந்த ஆண்டு அரசு ரூ.385.63 கோடி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ரூ.220 கோடிமதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் ஜெ.என். சாலையில் மருத்துவமனை வளாகத்தில், ரூ.165.63 கோடி மதிப்பில் நவீன வசதியுடன் கூடிய கூடுதல் கட்டடங்கள் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு மே மாதம் அப்போதையை முதல்வர் பழனிசாமி, தலைமை செயலகத்தில் இருந்தவாறு, காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அப்பணியில், தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் 3 மாதங்களில் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் சென்னை - புளியந்தோப்பு குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகம் தரமற்றவையாக உள்ளன என பொதுமக்கள் மத்தியில் புகார்எழுந்து, அதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ளஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இச்சூழலில், திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தரமற்ற முறையில் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அதன் எதிரொலியாக நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட ஆல்பி ஜான் வர்கீஸ், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியர், மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் தரை தளம், மேல் தளம் மற்றும் ஆய்வுக் கூட கட்டுமானங்களின் உறுதித்தன்மையை, கட்டுமானத்தை சிறிது உடைத்து பார்த்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்கள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான நீண்ட கால கட்டடங்கள் என்பதால், இந்த கட்டடங்களை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in