

புதுச்சேரியில் விநாயகர் சிலைதயாரிப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ரசாயன சாயங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் தினேஷ் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது வண்ணம் தீட்டிய பெரிய சிலைகளை செய்து வழிபட்டு பின்னர் நீர்நிலைகளில் மூழ்க வைப்பதால் நீர்நிலைகள் மாசடைவதற்கு காரணமாகிறது. இதுதொடர்பாக திருத்தப்பட்ட விரிவான நெறிமுறைகளை மத்திய மாசுக் கட்டுபாடு வாரியம் வகுத்துள்ளது. இதை https://dste.py.gov.in/ppcc/pdf/Guidelines/4.pdf. என்ற இணையதளத்தில் காணலாம்.
விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான, மக்கக்கூடிய, குறைந்த உயரம் உடையதாக, இயற்கையான மூலப் பொருட்களான களிமண் மற்றும் மண் போன்றவற்றை பயன்படுத்தி உருவாக்குதல் வேண்டும். சிலைகளுக்கு மலர்களை பயன்படுத்தி ஆபரணங்கள் செய்யலாம். சிலைகளை கவர்ச்சிகரமாக ஒளிர செய்வதற்கு மரத்திலிருந்து சுரக்கும் பிசினை பயன்படுத்தலாம். ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளை உருவாக்க நச்சு மற்றும் எளிதில் மக்காத ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப் பூச்சுகள் பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
மாறாக சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான நீர் சார்ந்த மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்துவதற்கு எளிதில் நீக்கக்கூடிய மற்றும் துவைக்கக்கூடிய அலங்கார ஆடைகளை பயன்படுத்த வேண்டும்.
அலங்கார ஆடைகளுக்கு வண்ணம் சேர்ப்பதற்கு பூக்கள், மரப்பட்டைகள், மகரந்தங்கள், இலைகள், வேர்கள், விதைகள், பழங்கள் மற்றும் வண்ண பாறைகள் ஆகியவற்றிலிருந்து இயற்கையாக தயாரிக்கப்பட்ட வண்ணங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
விநாயகர் சிலைகளை தயாரிப்பவர்கள் உள்ளாட்சித் துறையில் (நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து) முன்பே பதிவு செய்தல் வேண்டும். பாக்கு, வாழை, ஆலம், சால், இலைகள், மக்கும் காகித கோப்பைகள், தட்டுகள் மற்றும் மண் பானைகள் போன்றவற்றை பிரசாதம் விநியோகத்திற்கும் மற்றும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.
பூக்கள், இலைகள், உடைகள், காகிதத்தால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்கள் மற்றும் மக்கும் பொருட்கள் போன்ற வழிபாட்டு பொருட்களை சிலை மூழ்குவதற்கு முன்பு அகற்றப்பட்டு, நியமிக்கப்பட்ட சிலை மூழ்கும் இடத்தில் வழங்கப்பட்ட வண்ண குறியிடப்பட்ட தொட்டிகளில் பிரித்து போட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.