

புதுச்சேரி மாநிலம் தொண்ட மாநத்தம் மாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (40). வெல்டிங் காண்ட்ராக்ட் எடுத்து தொழில் செய்து வந்தார். இவர் நேற்று மாலை ராமநாதபுரம் வெள்ளேரி ஏரிக்கரையில் இருந்தபோது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சாரதி என்பவர் கண்ணனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் ஜிப்மர் கிளை மருத்துவமனையின் வெளியில் போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதைக்கண்ட காவலாளி மற்றும் மருத்துவர்கள் அவரை தூக்கிச் சென்று சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டார்.
விசாரணையில் “கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணன் தனது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் பிரபாவதி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். பெற்றோர்எதிர்ப்பால் தொண்டமாநத்தம் பகுதியில் குடிபெயர்ந்து வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த சாரதி என்பவர் தனக்கு சொந்தமான இடத்தை ரூ.6 லட்சத்துக்கு கண்ணனிடம் விற்றுள்ளார்.
இதை வாங்கிய கண்ணன் அந்த இடத்தில் வீடு கட்டி கடந்த 1 வருடத்துக்கு முன்பு குடி பெயர்ந்தார். ஆனால்சாரதி அடிக்கடி கண்ணன் வீட்டுக்கு சென்று அந்த இடத்தைகேட்டு வந்தார்.
இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஆனது. இதனிடையே கண்ணன்கடந்த ஒரு வருடமாக திருநெல்வேலியில் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்துவிட்டு கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி திரும்பியநிலையில் நேற்று மாலை கண்ணன் ஏரிக்கரையில் தாயக்கட்டை விளையாடுவதை அறிந்த சாரதி, அவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்” என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து வில்லியனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சாரதியை கைது செய்தனர்.