

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்தில் விவசாயிகளுக்கு பயிர் கழிவு மேலாண்மை தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
நல்லம்பள்ளி வட்டம் பாகல அள்ளி கிராமத்தில் வேளாண் துறை மூலம் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் கழிவு மேலாண்மை முறைகள் தொடர்பான இணையவழி பயிற்சி நடத்தப்பட்டது. நல்லம்பள்ளி வட்டார அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளரும் வேளாண் உதவி இயக்குநருமான இளங்கோவன் பயிற்சியை தொடங்கி வைத்தார். மேலும், மானிய திட்டங்கள் குறித்தும் அவர் விளக்கிப் பேசினார். பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சிவக்குமார், உதவி பேராசிரியர்கள் சங்கீதா, வெண்ணிலா ஆகியோர் பண்ணைக் கழிவுகள் மற்றும் பயிர் கழிவுகளை மக்கவைத்து இயற்கை உரமாக்கும் முறை பற்றியும், அக்கழிவுகளை மறு சுழற்சி செய்து நிலத்தில் இடும்போது மண்ணில் கார்பன், நைட்ரஜன் சத்து அதிக அளவில் கிடைக்கும் என்பது குறித்தும் விளக்கினர். மேலும், மண்புழு உரம் தயாரிப்பு, அசோலா வளர்ப்பு போன்ற உரங்களை இடுவதால் மண்ணில் ஏற்படும் மேம்பாடு, சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும் விதம் ஆகியவை குறித்து இணையவழியில் படக்காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சிவசங்கரி, உதவி தொழில்நுட்ப மேலாளர் அருள்குமார், உதவி வேளாண்மை அலுவலர் இளையராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.