

ஓணம் பண்டிகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் நேற்றுமுன்தினம் இரவு விடிய விடிய வியாபாரம் நடைபெற்றது.
கரோனா கட்டுப்பாடுகளால் கேரள வியாபாரிகளுக்கு அனுமதி இல்லாததால் 50 டன்னுக்கு மேல் பூக்கள் தேக்கம் அடைந்தன. வாழைத்தார்களும் குறைவாகவே விற்பனையாகின. இதனால் குமரி விவசாயிகள், மலர் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர் சந்தையில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவுக்கு பண்டிகை மற்றும் விழாக்களின் போது பூக்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படும். கேரள மாநிலத்தின் முதன்மை பண்டிகையான ஓணம் இன்று கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கேரளா மட்டுமின்றிகுமரி மாவட்டத்தில் மலையாள மொழிபேசும் மக்கள் தங்கள் வீடுகளில்9 நாட்களுக்கு முன்பிருந்தே அத்தப்பூகோலமிடுவது வழக்கம். கரோனா கட்டுப்பாடுகளால் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளதால் ஓணம் பண்டிகைக்கு பூக்களைகொள்முதல் செய்ய கேரள வியாபாரிகள் தோவாளைக்கு வரவில்லை.
இதனால் தோவாளையில் இருந்துவாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட மலர்களை கேரள எல்லை பகுதியில் இருந்து அவர்கள் வாங்கி சென்றனர். கடந்த 3 நாட்களாக ஓரளவு வியாபாரம் இருந்ததால் ஓணம் சிறப்பு மலர்சந்தை நேற்று முன்தினம் இரவுதொடங்கி விடிய விடிய நடைபெற்றது.கேரள மலர் வியாபாரிகள் செல்போன்மூலமும், ஆன்லைனிலும் ஆர்டர் செய்த பூக்களை வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.
மல்லிகை கிலோ 1,300 ரூபாய் முதல் 1,500 வரையும், பிச்சிப்பூ 1,100 முதல் 1,300 ரூபாய் வரையும் விற்பனை ஆனது. கிரேந்தி 80, வாடாமல்லி 270, கோழிக்கொண்டை 130, சம்பங்கி 320, ரோஜா 300-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிரேந்தி, கோழிக்கொண்டை, வாடாமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகாமல் 50 டன்னுக்கு மேல் தேக்கம் அடைந்தன. இதனால்வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டம் தொடங்கிய சில நாட்கள் பூக்கள் விற்பனை நன்றாக இருந்தது.
இதனால் ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாளன்று பூக்கள் விற்பனைகைகொடுக்கும் என்று நம்பினோம்.ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் இல்லாததால் பூக்களை அதிகம்கொள்முதல் செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அத்தப்பூ கோலமிட பயன்படுத்தும் வண்ணப் பூக்கள் 50 டன்னுக்கு மேல் தேக்கம் அடைந் துள்ளன’’ என்றனர்.
இதுபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து நேந்திரன், செவ்வாழை, மட்டி போன்ற வாழைத்தார்களும் கேரளாவுக்கு குறைவான அளவிலேயே விற்பனையாகின. இதனால் விவசாயிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.