

கரூர்/அரியலூர்: கரூர் வெங்கமேடு விவிஜி நகரைச் சேர்ந்தவர் உதயகுமார்(45). ஜவுளி உற்பத்தி நிறுவன மேற்பார்வையாளர். இவர் கடந்த 18-ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒண்ணே கால் பவுன் நகை, வெள்ளிக்கொலுசு, வெள்ளி அரைஞாண், ரூ.40,000 ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த வெங்கமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராசு(62). என்எல்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கோவையில் உள்ள மகள் வீட்டுக்கு கடந்த 5-ம் தேதி மனைவியுடன் சென்றிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை இவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் செல்வராசுவுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, செல்வராசுவின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 கிராம் தங்க காசுகள், ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை திருடு போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.