

திருப்பத்தூர்: கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சர்வதேச அஞ்சல் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என திருப்பத்தூர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் மு.மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய தபால் துறை பல்வேறு சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. அதில், ஒன்று சர்வதேச அஞ்சல் சேவையாகும். கரோனா ஊரடங்கு காரணமாக சர்வதேச அஞ்சல் சேவைக்கு பல்வேறு கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது அஞ்சலக இயக்குநரகம் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, சர்வதேச விரைவு தபால், சர்வதேச பதிவு பார்சல், ITPS போன்ற சேவைகள் 60-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இந்திய தபால் அஞ்சல் துறையின் சர்வதேச அஞ்சல் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இது தொடர்பான விவரம் தேவைப்படுவோர் அருகில் உள்ள அஞ்சலகங்களை தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.