

நீலகிரி மாவட்டத்துக்கு நடப்பாண்டில் ரூ.3,850.45 கோடி கடன் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
உதகையில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில், 2021-22ம் ஆண்டுக்கான கடன்திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு கூறியதாவது: ஆண்டுதோறும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல மகளிர் குழுக்களுக்கு பல்வேறு கடன்களும், வணிக ரீதியான கடன்களும் வங்கிகள் மூலம் வழங்கப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் வங்கிகள் கடன் இலக்கு நிா்ணயம் செய்வது வழக்கம்.
இதில் நடப்பு ஆண்டில் மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ரூ.3,850.45 கோடி கடன் திட்ட இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.375 கோடி அதிகமாகும்.விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ.2,722.50 கோடியும், குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மேம்பாட்டுக்கு ரூ.485.10 கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.642.85 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, கனரா வங்கியின் சார்பில் கோத்தகிரி, கூக்கல்தொரை மற்றும் கொணவக்கரை பகுதிகளைச் சேர்ந்த 10 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில் நபார்டு வங்கி வளர்ச்சி மேலாளர் திருமலை ராவ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்யராஜா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகசிவா, தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.