

சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு சினிமா ஆப்ரேட்டர் மற்றும் பொது தொழிலாளர் நலச் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று சேலத்தைச் சேர்ந்த திரையரங்கு ஆப்ரேட்டர்கள், திரையரங்க தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகள் அடங்கிய பாதாகையுடன் சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் ஆட்சியரிடம் மனு அளிக்க நிர்வாகிகளை மட்டும் அனுமதித்தனர். இதுகுறித்து சங்க மாநிலத் தலைவர் சுவாமிநாதன், பொதுச் செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், திரையரங்கு சட்டத்தின்படி முறையாக பயிற்சி பெற்று உரிமம் உள்ள சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் சினிமா ஆப்ரேட்டர்கள், திரையரங்கு சார்ந்த தொழிலாளர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் உள்ளனர். திரையரங்கு தொழிலாளர்கள், எந்த நல வாரியத்திலும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. எனவே தமிழக அரசு சினிமா ஆப்ரேட்டர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
கரோனாவால் கடந்த ஓராண்டாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால், ஆப்ரேட்டர்கள், தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இன்றி, வருவாய் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். பல்வேறு தொழிலாளர்களுக்கு, கரோனா கால நிவாரணம் வழங்கியது போல, திரையரங்கு ஆப்ரேட்டர்கள், தொழிலாளர்களுக்கும் அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். மேலும், குறைந்த பட்ச ஊதிய சட்டத்தின்படி ஊதியம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திரையரங்கு தொழிலாளர்களுக்கு தமிழக அரசு, தனி நலவாரியம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.