திருப்பூரில் 2-வது நாளாக ‘மக்கள் ஆசி யாத்திரை' பயணம் : உடுமலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு வரவேற்பு

திருப்பூரில் 2-வது நாளாக ‘மக்கள் ஆசி யாத்திரை' பயணம் :  உடுமலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு வரவேற்பு
Updated on
1 min read

மத்திய அரசின் திட்டங்களை மக்கள் அறிய செய்யும் நோக்கில், ‘மக்கள் ஆசி யாத்திரை’ எனும் சுற்றுப் பயணத்தை, திருப்பூர் மாவட்டத்தில் 2-வது நாளாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று மேற்கொண்டார்.

பல்லடம் சாலை வித்யாலயம் பகுதியில் தியாகி சுந்தராம்பாள் முழு உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினரை சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதையடுத்து கல்லூரியில் படிக்கும் மற்றும் படிப்பை முடித்த பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்களிடம் கோரிக்கை மனு பெற்றார். பலரும் வேலைவாய்ப்பு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு படிப்பதற்கான நூலகம் கோரி மனு அளித்திருந்தனர்.

அதேபோல, தேசிய அளவில் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற மாணவி ஹரிணி, பீச் வாலிபால் போட்டியில் தங்கம் வென்ற மாணவர் தரணிஷ், ஜூடோ போட்டியில் தங்கம் வென்ற மாணவர் மணிவேலன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் முன்னாள் மாநிலத் தலைவரும் கேரள மாநில பொறுப்பாளருமான சி.பி. ராதாகிருஷ்ணன் உட்பட பாஜகவினர் பலர் பங்கேற்றனர்.

கோரிக்கைகள் நிறைவேறும்

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது மக்களிடையே எல்.முருகன் பேசும்போது ‘‘எனது பாட்டன் செருப்பு தைக்கும் தொழிலாளி. எனது தந்தை விவசாயக் கூலி. அந்த அடிப்படையில் வந்த எனக்கு, பிரதமர் நரேந்திரமோடி மத்திய இணை அமைச்சர் பதவி அளித்து கவுரவப்படுத்தியுள்ளார். இதுதான் பாஜக. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாஜக குறித்து அவதூறு பரப்பி வருகின்றன. சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது தாராபுரத்துக்கு பரப்புரைக்காக வந்த பிரதமர் நரேந்திரமோடி, அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையான ரயில் சேவை நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். அந்த கோரிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன். அதேபோல மூலனூர், குண்டடம் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்’’ என்றார்.

உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in