திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் - நெல் கொள்முதல் நிலையத்தை அதிகரிக்க நடவடிக்கை : பால்வளத் துறை அமைச்சர் நாசர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் -  நெல் கொள்முதல் நிலையத்தை அதிகரிக்க நடவடிக்கை :  பால்வளத் துறை அமைச்சர் நாசர் தகவல்
Updated on
1 min read

கூட்டுறவுத் துறை சார்பில், திருவள்ளூர், ஜெ.என்.சாலையில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல்நிலையத்தை பால்வளத் துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்து, நெல் கொள்முதல் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஜெய, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபிநேசன், திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நாசர் தெரிவித்ததாவது: திருவள்ளூர்மாவட்டத்தில் ஒரு லட்சம் ஹெக்டேர்பரப்பளவில் சம்பா நெல் பயிரிடப்படுகிறது. அந்த நெல் முறையான வகையில், இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளிடமிருந்து கூட்டுறவுத் துறை மூலம் கொள்முதல் செய் யப்பட்டு, விவ சாயிகளுக்கு உரிய விலை வழங்கப்படுகிறது.

முந்தைய அரசில், மாவட்டத்தில் 12 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது 46 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இவற்றை 62 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 62 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் வாயிலாக 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லை பெற இயலும். நெல் கொள்முதல் தொடர்பாக புகார் ஏதும் இருப்பின் விவசாயிகள் கட்டணமில்லா தொலைபேசி எண் 18005997626, வாட்ஸ்-அப் எண் 9840327626 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அதிமுக அரசின் பல அமைச்சர்கள் மீதும் ஆளுநரிடம் ஊழல்புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், நடவடிக்கைகள் தொடரும். ஆகையால், ராஜேந்திர பாலாஜி பாஜகவுக்கு சென்றாலும் அவர் தண்டிக்கப்படுவது உறுதி.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in