

தமிழகத்தில் 3-வது சிறந்த பேரூராட்சி விருது பெற்ற கோட்டையூர் செயல் அலுவலரை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பாராட்டினார்.
சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் தமிழகத்தில் 3-வது சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டது. 6.75 சதுர கி.மீ. பரப்புள்ள இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 14,766 பேர் வசிக்கின்றனர். தற்போது 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்த பேரூராட்சியில் சாலை வசதி சிறப்பாக உள்ளது. மேலும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் குப்பையை பெற்று தரம் பிரித்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.
கரோனா தொற்று காலத்தில் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டது. இதையடுத்து இந்த பேரூராட்சி, தமிழகத்தில் 3-வது சிறந்த பேரூராட்சியாக தேர்வு செய்யப்பட்டது.
இதற்கான விருதும், ரூ.3 லட்சம் பரிசையும் பேரூராட்சி செயல் அலுவலர் கவிதாவுக்கு சுதந்திர தினத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிலையில் நேற்று செயல் அலுவலர் கவிதாவை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பாராட்டினார். பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கணேஷ்ராம் உடன் இருந்தார்.