

கரோனா தொற்றின் 2-வது அலை இன்னும் முழுமையாக முடிவுக்குவராத நிலையில், மூன்றாவது அலை விரைவில் வரக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே, தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசிபோடாதவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். அதன் அடிப்படையில் தற்போது வீடுவீடாகச் சென்று விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டு வருகின்றனர். குறிப்பாக கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 7 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய பகுதிகளிலும் மருத்துவக் குழுவினர் தினமும் ஒரு பகுதிக்கு சென்று தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டு, கரோனா 3-வது அலை பரவலை தடுப்போம் என, மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.