

தென்னிந்திய திருச்சபையின் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்துக்கான தேர்தல் ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் அக்டோபர் 21-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பேரில் முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது.
திருமண்டலத்தில் உள்ள 110 சேகரங்களுக்கு உட்பட்ட 500-க்கும்மேற்பட்ட ஆலயங்களில் தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் 25 சேகரங்களில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால், மீதமுள்ள 85 சேகரங்களுக்கு உட்பட்ட சுமார் 350 ஆலயங்களில் நேற்றுதேர்தல் நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மேற்பார்வையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நடுவக்குறிச்சி, ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட சில சபைகளில் வாக்குபதிவில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். போலீஸார் தலையிட்டு சமரசம் செய்து, தேர்தலை நடத்தினர். காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது. உடனடியாக வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கின.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அடுத்து திருமண்டல செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் வாக்களிப்பார்கள். இறுதியாக அக்டோபர் 20 மற்றும் 21தேதிகளில் தேர்தலில் வெற்றி பெற்ற திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் மற்றும் குருவானவர்கள் சேர்ந்து லே செயலாளர், குருத்துவ செயலாளர், உபதலைவர் உள்ளிட்ட பல்வேறு குழுக்களின்நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள்.தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகளின் பதவி காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். சாயர்புரம் அருகேயுள்ள தங்கம்மாள்புரம் சேகரத்தில் வாக்காளர் பட்டியலில் சிலரது பெயர் திடீரென நீக்கப்பட்டதாக கூறி நேற்று முன்தினம் இரவு ஆலயத்தின் கோபுரத்தில் ஏறி சிலர் போராட்டம் நடத்தினர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்கம்மாள்புரம் சேகரத்துக்கான தேர்தல் பொறுப்பாளர், தங்கம்மாள்புரம் சேகர தேர்தலை நிறுத்தி வைப்பதாக போலீஸாரிடம் கடிதம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். எனவே, தங்கம்மாள்புரம் சேகரத் தில் மட்டும் நேற்று தேர்தல் நடை பெறவில்லை.